×

2வது நாளில் 481 இளைஞர்கள் உடல் திறன் தேர்வுக்கு தேர்ச்சி

சேலம், நவ.8: சேலத்தில் நடந்து வரும் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் 2வது நாளில் 481 இளைஞர்கள் அடுத்த நிலையான உடல் திறன் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக காவல்துறையில், 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடத்தை நிரப்ப சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. சேலம் மாவட்டம், சேலம் மாநகர், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த 2,767 பேருக்கு (பெண்கள் 612), சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி, உடல் திறன் தேர்வு நடக்கிறது. நேற்று முன்தினம் முதல்நாளில் 800 இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், 705 பேர் பங்கேற்றனர். அவர்களில், உயரம், மார்பளவு, 1500 மீட்டர் தகுதி ஓட்டம் போன்ற தேர்வுகளில் 150 பேர் தகுதியிழந்தனர். 555 பேர் அடுத்தநிலை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.

2வது நாளான நேற்று, உடல் தகுதி தேர்வில் பங்கேற்க 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 669 பேர் பங்கேற்றனர். 131 பேர் ஆப்சென்ட் ஆகினர். காலை 6 மணிக்கு இளைஞர்கள் வந்தவுடன், அழைப்பாணை மற்றும் அடையாள அட்டைகளை சரிபார்த்தனர். பின்னர், உயரம், மார்பளவு அளவீடு நடந்தது. அதன்பின், 1500 மீட்டர் தகுதி ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான இளைஞர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைந்து வெற்றி பெற்றனர். மாலை 5 மணி வரை நடந்த தேர்வின் முடிவில் 188 பேர் தகுதியிழந்தனர். 481 பேர் அடுத்தநிலையான உடல் திறன் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். 3வது நாளான இன்று, உடல் தகுதி தேர்வில் 700 பேர் பங்கேற்கவுள்ளனர்.

Tags : youths ,
× RELATED ரூ.10க்கு கூவி கூவி விற்றும் பயனில்லை...