×

கணவன் உறவினர்கள் தாக்கியதில் குழந்தைகளுடன் பெண் படுகாயம்

வாழப்பாடி, நவ.8: வாழப்பாடி அருகே, வீட்டை விட்டு வெளியேறும்படி கணவனின் உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த பெண், 2 பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் தவித்து வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். வாழப்பாடி அருகே பேளூர் கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்(43). இவரது மனைவி லதா(39). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 12ம் தேதி, உடல்நலக்குறைவால் சக்திவேல் இறந்து விட்டார். இதனிடையே, சக்திவேலின் பெற்றோர் மற்றும் 3 சகோதரிகள், லதா மற்றும் அவரது குழந்தைகளை தாக்கி, அவர்கள் வசித்து வரும் தோட்டத்து வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, வீட்டை பூட்டி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த லதா மற்றும் அவரது மகள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, பருவ வயதில் உள்ள 2 மகள்கள், ஒரு மகனுடன் இருக்க வீடின்றி தவித்து வருகிறார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய கணவன் வீட்டார் மீது நடவடிக்கை எடுப்பதோடு, குழந்தைகளுடன் வசிக்கும் வீட்டை மீட்டு தரவேண்டும் என லதா புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags :
× RELATED பெண்ணிடம் வழிப்பறி