×

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்க நீண்டநேரம் காத்திருப்பு

அருப்புக்கோட்டை நவ.8: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை வாங்க நோயாளிகள் காத்துக்கிடக்கின்றனர். கூடுதல் கவுண்டர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை பெரிய மருத்துவமனையாக உள்ளது. அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள நரிக்குடி, திருச்சுழி, ஆகிய பகுதிகளில் இருந்தும், நகரிலிருந்தும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 200க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதய நோய், சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு வகையான வியாதிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 கவுண்டர்கள் மாத்திரை மருந்து வழங்க உள்ளது. இருந்தாலும் நோயாளிகளின் வருகை அதிகமாக இருப்பதால் மருந்தாளுநர்களால் உடனுக்குடன் மருந்து மாத்திரைகளை வழங்க முடியவில்லை.

மருத்துவரின் சீட்டை கணினி மூலம் சரிபார்த்து ஒரு நோயாளிக்கு குறைந்தபட்சம் 5 நிமிடத்திற்குள் மேல் மாத்திரை, மருந்து வழங்க கால அவகாசமாகிறது. இதனால் நோய்கள் மாத்திரை, மருந்துகள் வாங்க பலமணி நேரம் காத்து கிடக்கின்றனர். கைக்குழந்தைகளுடனும் நோயாளிகள் கால்கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் கவுண்டர்கள் திறக்க வேண்டும். மேலும் ஊசிபோடும் இடத்தில் போதுமான செவிலியர்கள் இல்லாததால் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் ஊசி போடுகின்றனர். இதனால் ஆண்கள் ஊசி போடும் இடத்திலேயே பெண்களுக்கும் ஊசி போடுவதால் பெண்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் ஊசி போட செவிலியர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை வாங்க நீண்டநேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் கவுண்டர் திறக்க வேண்டும். ஆண், பெண்கள் நோயாளிகளுக்கு தனித்தனி இடத்தில் ஊசி போட வேண்டும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : Aruppukkottai Government Hospital ,
× RELATED மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து...