நோய் பரவும் அபாயத்தில் காமயகவுண்டன்பட்டி

கம்பம், நவ. 8: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 2வது வார்டு பகுதியில் சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததாலும், திறந்தவெளி கழிப்பிடத்தாலும் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி உள்ளது. ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் இரண்டாவது வார்டு, வடக்குவெளி வீதியில் ரோட்டின் காளி, விநாயகர் கோயில்கள் உள்ளன. இப்பகுதியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் பாதையோரத்தில் குப்பை கொட்டப்படுகிறது. ரோட்டின் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய்களில் பலமாதங்களாக கழிவுகள் அகற்றப்படவில்லை.

இதன் காரணமாக ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் கடந்த 2001ல் கட்டி தற்போது பயன்பாட்டில் இல்லாத மகளிர் கழிப்பிடத்தின் முன் பகுதியை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். தேனி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என கூறப்படும் நிலையில், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் 2வது வார்டு பகுதியில் ரோட்டின் இருபுறமும் திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது. அதுபோல் காமயகவுண்டன்பட்டி- ராயப்பன்பட்டி ரோட்டில் தனியார் பள்ளிக்கு எதிரே கடந்த மூன்று மாதமாக நிலத்தடி தண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் பற்றாக்குறையான இந்த நேரத்தில் இதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திறந்வெளி கழிப்பிடத்தை தடுக்கவும், நோய்பரவும் அபாயத்தை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கூறுகையில், பல மாதங்களாக இப்பகுதியில் சாக்கடைக் கழிவுகள் அகற்றப்படவில்லை.
இங்குள்ள பொதுக்கழிப்பறை செப்டிடேங்க் உடைந்து மலக்கழிவுகள் சாக்கடை வழியாக வெளியேறுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இது தெரியாமல் இருப்பதற்காக இதில் பினாயிலை ஊற்றி விடுகின்றனர். இதுகுறித்து பேரூராட்சியில் அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயன்பாடில்லாமல் மூடிக்கிடக்கும் கழிப்பறைய இடிக்க வேண்டும்.
இது இருப்பதால் இதன் முன்பகுதியை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மூன்று மாதங்களுக்கு மேலாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்