மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் கவலை

போடி, நவ.8 : போடி வட்டாரத்தில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் திடீரென படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து வேளாண் அதிகாரிகள் படைப்புழு தாக்குதல் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். போடி வட்டார பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மக்காளச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் திடீரென மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்கள் அதிகளவில் தென்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள், போடி வேளாண்மை துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹரிபாய் தலைமையிலான அதிகாரிகள், போடி அருகே டொம்புச்சேரியில் படைப்புழு தாக்குதலான மக்காச்சோள பயிர்களின் தாக்குதலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதன் பின் விவசாயிகளிடம் போடி வேளாண்மை உதவி இயக்குநர் அமலா கூறுகையில், மக்காச்சோளப்பயிர் கோடையில் உழவு செய்து கடைசி உழவின் போது வேப்பம்புண்ணாக்கு 250 கிலோ ஏக்கருக்கு கட்டாயம் இட வேண்டும். பெவேரியா பேசியானா ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.

இனக்கவர்ச்சி பொறி 15:20 எண்கள் ஹெக்டருக்கு வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுத்து கூட்டாக அழிக்கலாம். பயிர் இடைவெளி 60க்கு 25 செ.மீ இறவை, மானாவாரி 45க்கு 25 செ.மீ, 10 வரிசைக்கு ஒரு வரிசை நடவு செய்யாமல் இடைவெளி விட்டு நடுவதன் மூலம் படைப்புழுக்களை பரவாமல் கட்டுப்படுத்தலாம். வரப்பு பயிராக சூரியகாந்தி, தட்டைப்பயறு, எள், சோளம் பயிரிடுவதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை உருவாக்கி படைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம். மேலும் பயிர் சுழற்சி முறையினை கடைபிடித்தல் வேண்டும். ரசாயன முறையில் 3 பருவமாக பூச்சிக்கொல்லிகளை தெளித்து படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்’’ என கூறினார். இதையடுத்து தற்போது போடி வட்டாரப்பகுதிகளில் 415 ஹெக்டேர் மக்காச்சோளப்பயிர்களில் 20 முதல் 25 நாட்கள் வரையிலான அசாடிடிராக்டின் தெளிப்பானை தொடர்ந்து ரசாயன பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட உள்ளது. 40 முதல் 45 நாள் மக்காச்சோளப்பயிருக்கு 100 ஹெக்டேர் பரப்பளவில் ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த பாயிர்பாதுகாப்பு மருந்து தெளிப்பு கிராம உழவர் ஆட்களை கொண்டு தெளிக்கப்பட்டு வருகிறது.

Tags : plague ,
× RELATED குறைந்த தண்ணீர் தேவை என்பதால்...