வெற்றி நம் கையில் கையேடு வெளியீடு

கிருஷ்ணகிரி, நவ.8:  ஐவிடிபி சார்பில் ₹2 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு மொழி மாணவர்களுக்கான வெற்றி நம் கையில் கையேடு வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், நம்பிக்கையோடு பொதுத் தேர்வை எதிர்கொள்ளவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு, வெற்றி நம் கையில் எனும் வினா-விடை தொகுப்பு நூலை தயாரித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தெலுங்கு வழியில் 11வது மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக, ₹2 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட வெற்றி நம் கையில் வினா-விடை கையேடு வெளியிடும் நிகழ்ச்சி, ஐவிடிபி தலைமை அலுவலகத்தில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் பிரபாகர் பங்கேற்று, வெற்றி நம் கையில் கையேட்டை வெளியிட்டு பேசினார்.

நிகழ்ச்சியில் ஐவிடிபி நிறுவனர் பேசுகையில், ‘இதுவரை தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு வழியில் வெற்றி நம் கையில் கையேடு ₹4.12 கோடி மதிப்பிலும், பல்வேறு கல்வி பணிகளுக்காக ₹25 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது,’ என்றார். நிகழ்ச்சியை ஓசூர் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் நாராயணன் தொகுத்து வழங்கினார். தெலுங்கு வழியில் இந்த புத்தகத்தை தயாரிக்க உதவிய 36 ஆசிரியர்களுக்கு தலா ₹1100 மதிப்பிலான பாஸ்ட் டிராக் பேக் என மொத்தம் ₹40 ஆயிரம் மதிப்பில் பரிசு வழங்கப்பட்டது.

Tags :
× RELATED குறிக்கோள் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்காது!