கொட்டும் மழையில் விவசாயிகள் தர்ணா

தர்மபுரி, நவ.8: இலவச மின்சாரம் வழங்காததை கண்டித்து, தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, கொட்டும் மழையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட கோடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மாணிக்கம், பச்சையப்பன், ஆறுமுகம், வேல்முருகன், சின்னசாமி ஆகியோர், கடந்த 1989ம் ஆண்டு இலவச மின் இணைப்பு கேட்டு, மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர். இதுதொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு, அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கலாம் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பென்னாகரம் துணை மின்நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் அலைகழித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கக்கோரி, தர்மபுரி மின்சார வாரிய பகிர்மான கழக அலுவலகத்தில், மாணிக்கம் உள்ளிட்ட 5 விவசாயிகளும் நேற்று மாலை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இனியும் தங்களுக்கு மின்இணைப்பு வழங்காவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, தர்ணாவை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கண்ணமங்கலம் அருகே உழவர் திருவிழாவில்...