×

மானாமதுரை பகுதியில் திடீர் பனிப்பொழிவால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுது

மானமதுரை, நவ. 8:  மானாமதுரை பகுதியில் திடீர் பனிப்பொழிவு காரணமாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. ஆனால் மானாமதுரை வட்டாரத்தில் எதிர்பார்த்த பருவமழை இல்லை. ஆனால் தற்போது தொடர்ந்து விட்டு விட்டு தூறல்மழை பெய்து வருவதால் இரவில் மழையும் பகலில் வெயிலும் என சூழ்நிலை மாறியுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இந்த பனிப்பொழிவு காரணமாக மானாமதுரை பகுதியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் மானாமதுரை அரசு மருத்துவமனை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளித்தொந்தரவு, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமான முதியவர்கள், குழந்தைகள் வந்து செல்கின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு,  தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகலில் வெயில், இரவில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. இதுபோன்ற காரணத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவி வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிலவேம்பு குடிநீர் கசாயத்தை வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், ‘உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து கிராமங்களிலும் நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்திட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Manamadurai ,snowfall ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை