×

5 ஆண்டுகளாக அசைவில்லை கணக்கெடுப்போடு நின்று போன காவிரி குடிநீர் திட்ட விரிவாக்கம்

சிவகங்கை, நவ.8: சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவு படுத்துவதற்காக கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டும் அடுத்த கட்ட நடவடிக்கை இல்லாமல் நின்றுபோயுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் ராமநாதபுரம்(காவிரி) கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்பகுதிகள் பயனடைந்து வருகின்றன. தொடர்ந்து 2011ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சி, திருப்பத்தூர், இளையான்குடி, திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் காளையார்கோவில் அருகில் உள்ள கிராமப்பகுதிகள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் சில பகுதிகள் மட்டும் இணைக்கப்பட்டன. ஆனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பல்வேறு பகுதிகள் இணைக்கப்படாமல் உள்ளன. மீண்டும் கடந்த 2013ம் ஆண்டு திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை தாலுகாவிற்கு உட்பட்ட மதகுபட்டி, ஒக்கூர், தமறாக்கி, மேலப்பூங்குடி, வீரபட்டி திருமலை பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட கணக்கெடுப்பு செய்து திட்ட மதிப்பீடும் அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு பணி முடிந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தும் அடுத்தகட்ட பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மெயின் பைப் லைன் திருப்பத்தூர், கல்லல், காளையார்கோவில், மறவமங்கலம், இளையான்குடி வழியாக ராமநாதபுரம் செல்கிறது.

இதேபோல் காளையார்கோவிலிலிருந்து கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை வழியே பைப் லைன் அமைக்கப்பட்டு சிவகங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மெயின் பைப் லைன் செல்லும் வழியில் உள்ள ஊர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கிராமங்கள் சேர்க்கப்பட்டபோது குடிநீர் பிரச்சினை உள்ள பல ஊர்கள் இணைக்கப்படவில்லை. இதுபோல் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினையுள்ள ஏராளமான கிராமங்கள் விடுபட்டுள்ளன. குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்படும் அனைத்து ஊர்கள் மற்றும் அனைத்து ஊராட்சிகளையும் இத்திட்டத்தில் இணைத்து விரிவாக்க பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் அதன்பிறகு இத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. ஆனால் கணக்கெடுப்பு பணி முடிந்து இதுவரை அடுத்தகட்ட பணிகள் எதுவும் தொடங்காமல் உள்ளனர். நகராட்சிகள் மற்றும் சில கிராமங்களை தவிர மற்ற கிராமங்களுக்கு வேறு குடிநீர் திட்டங்கள் இல்லை. இதனால் கோடை காலங்களில் கடும் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் ஏற்கனவே கணக்கெடுப்பு பணி முடிந்த ஊர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பிற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றனர்.

Tags : Cauvery ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே பைப் லைன் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்