×

தமிழுக்கு பெருமை தேடி தந்த மாவட்டம் சிவகங்கை

சிவகங்கை, நவ. 8:  சிவகங்கை மாவட்டம் தமிழுக்கு பெருமை தேடித்தந்த மாவட்டம் என கலெக்டர் ஜெயகாந்தன் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது.  ‘சிவகங்கை மாவட்டம் தமிழுக்கு பெருமை தேடித்தந்த மாவட்டமாக திகழ்கிறது. முருகக்கடவுள் அவதரித்த இடம் கோவானூர் கிராமம் என்றும், அங்கு அமைந்துள்ள கோயில் முன்பாகவே ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்று நீர் ஊற்று கங்கையாக உருவாகும். அதனால் முருகனுக்கு கங்கை குமரன் என்ற பெயர் சூட்டப்பட்டு அதன்மூலம் சிவகங்கை என்ற பெயருடன் இந்த ஊர் அமைந்ததாக வரலாறு கூறப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு சிவகங்கை மாவட்டத்திற்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதுபோல் சங்ககால புலவர்கள் ஒக்கூர் மாசாத்தியார், கனியன் பூங்குன்றனார், கவிச்சக்கரவர்த்தி கம்பன், கவியரசு கண்ணதாசன் போன்றோர் வாழ்ந்த மண் இது.

மேலும் கீழடி அகழ்வராய்ச்சி தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தி வருகிறது. இத்தகைய பெருமை மிகுந்த மாவட்டத்திலுள்ள அனைவரும் தமிழ் மொழி மேலும் வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து 2017ம் ஆண்டிற்கு ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகம், சிறந்த அலுவலர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், தென்னிந்திய மொழிகளின் ஆய்வறிஞர் முனைவர் பசும்பொன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாந்தி, மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவர் சத்தியமூர்த்தி, முத்தமிழ் பாசறை  தலைவர் சந்திரன் மற்றும் தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sivaganga ,
× RELATED சிவகங்கை நகராட்சியில் தேங்கும் கழிவு...