×

பயிர் இன்சூரன்ஸ் கணக்கெடுப்பு முறைகள் மாற்றப்படுமா?

சிவகங்கை, நவ. 8: சிவகங்கை மாவட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் கணக்கெடுப்பு விதிமுறைகளை மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 521 வருவாய் கிராமங்கள் (குரூப்) உள்ளன. 2013ம் ஆண்டிற்கு மாவட்டம் முழுவதும் பயிர் இன்சூரன்ஸ் செய்த சுமார் 200 வருவாய் கிராமங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் கணக்கெடுப்பில் குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. 2014ம் ஆண்டிற்கு இன்சூரன்ஸ் இழப்பீடு இல்லை என அறிவிக்கப்பட்டது. 2015ம் ஆண்டில் நெல் விவசாயம் சுமார் 62 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் செய்யப்பட்டது. மழை இல்லாமல் அனைத்து பகுதிகளுமே வறட்சி பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் 4 பிர்க்காக்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. 2016ம் ஆண்டில் 69 ஆயிரத்து 200 ஹெக்டேரில் பயிர் செய்யப்பட்ட நிலையில் போதிய மழை இல்லாததால் மாவட்டம் முழுவதும் சில பகுதிகள் கூட விளையாமல் சாகுபடி செய்யப்பட்ட அனைத்து பயிர்களும் கருகின.

ஆனால் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. டிசம்பரில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. 2017ம் ஆண்டில் 72 ஆயிரத்து 153 ஹெக்டேர் நெற் பயிர் சாகுபடி செய்த நிலையில் முழுமையாக அனைத்து பயிர்களும் கருகின. மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக நூறு சதவீதம் முற்றிலும் விளையாமல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் 12 சதவீதம், 14 சதவீதம், 21 சதவீதம் என பல்வேறு பகுதிகளுக்கு பெயரளவில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு இன்சூரன்ஸ் இழப்பீட்டிலும் பாதிப்பு சதவீதத்தில் குளறுபடி நிலவுவதால் இழப்பீடு வழங்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயம் பொய்த்து வருவதும், ஆண்டுதோறும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து பெயரளவிற்கு மட்டும் இழப்பீடு வழங்கி வருவதும் விவசாயிகளை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. செயற்கைக்கோள் விபரப்படி 1 குரூப்பில், நான்கு இடங்களில் மட்டும் கணக்கெடுப்பு நடத்துவது, இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் அவர்கள் விருப்பத்திற்கு கணக்கெடுப்பு செய்வது உள்ளிட்ட முறையில் குழப்பமே ஏற்படும் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு கணக்கீட்டிற்கு அனுப்பும் சர்வே எண்களையுடைய வயல்களில், கிணற்று பாசனம் உள்ள வயல்கள் இருந்தால் அதை எப்படி அந்த குரூப்பில் உள்ள அனைத்து விவசாய நிலத்திற்கான கணக்காக ஏற்க முடியும். கிணற்று பாசன நிலத்தை கணக்கில் வைத்து அந்தப்பகுதி முழுவதும் விளைந்துள்ளதாக எழுதி விடுகின்றனர். இந்த முறையை மாற்ற வேண்டும். குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் ஆய்வு நடத்தாமல் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள், வருவாய்த்துறையினர், வேளாண்துறையினர் விளைச்சல் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்யாமல் சில இடங்களில் மட்டுமே ஆய்வு செய்துவிட்டு அதை மாவட்டம் முழுவதிற்குமான முடிவாக மாற்றி விடுகின்றனர். இதனால் விவசாயிகளே தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். எனவே பயிர் இன்சூரன்ஸ் கணக்கெடுப்பு முறைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED பயிர் இன்சூரன்ஸ் கணக்கெடுப்பு முறைகள் மாற்றப்படுமா?