×

தொடர்மழையால் இடிந்து விழுந்த கடலாடி அரசு பள்ளி கட்டிடம்

சாயல்குடி, நவ. 8: கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக்கு கட்டிடங்கள் இடிந்து வருவதால், ஆபத்திலேயே கல்வி பயிலும் அவலம் இருப்பதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். கடந்த 1967ம் ஆண்டு துவங்கப்பட்ட கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் ஐந்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் உள்ளன. கழிப்பறை கட்டிடம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால் கழிப்பறை கட்டிடங்கள், கோப்பைகள் சேதமடைந்து கிடக்கிறது, கழிப்பறைக்குள் சீமை கருவேல மரங்களும் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். மாணவிகள் வெளியில் செல்லமுடியாமல் பள்ளிக்கு வரும் காலை முதல் மாலை வரை கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருடங்கள் பல ஆகிவிட்டதால், சுற்றுச்சுவர் சேதமடைந்து தாழ்வாக இருக்கிறது. இதனால் பள்ளி இல்லாத நேரங்களில் வரும் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அடுப்பு மூட்டி, கறி சமைத்து, மதுகுடித்துவிட்டு பாட்டில்களையும், சமைத்த பொருட்களையும் வளாகத்தில் தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு நிலவுவதுடன் பாட்டில் உடைந்து சிதறி கிடக்கும் துகள்கள் மாணவர்

களின் கால்களை பதம் பார்த்து வருவதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். பள்ளி கட்டிடங்களின் பெரும்பாலனவை மேற்கூரை சேதமடைந்து கிடக்கிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழைக்கு கட்டிடம் ஒழுகி வருவதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. கட்டிடம் ஈரப்பதத்துடனே இருப்பதால் கட்டிடத்தில் சிமிண்ட் பூச்சுகள் பெயந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் மாணவர்கள் சேதமடைந்த கட்டிடம் பக்கம் செல்ல அவசியம் இருக்கும்போது அச்சத்துடன் செல்வதாக கூறுகின்றனர். இதனால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் எப்போது சிமிண்ட் பூச்சு பெயர்ந்து விழும் என்ற ஒருவித பயத்துடன் வகுப்பில் இருந்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாததாலும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடப்பதாலும், கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு திறமை மறைக்கப்பட்டு வருகிறது. பள்ளி துவங்கப்பட்டு 52 வருடங்களாகியும் வகுப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி எவ்வித முன்னேற்றம் இல்லாமல் இருப்பதால் மாணவர்களை பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : seaside government school building ,
× RELATED நெற்பயிரில் குலநோய் தாக்குதல் தீவிரம்