×

நத்தம் பட்டாவையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

திருவாடானை, நவ. 8: விவசாய நிலங்களின் ஆவணங்களைப் போல் நத்தம் மனை பட்டாவையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருவாய்த்துறை சார்பில் பொது சொத்துக்கள் கண்மாய் குளங்கள் போன்ற நீர்நிலைகள் மற்றும் விவசாயிகளின் பட்டா நிலங்கள் போன்றவற்றை மேனுவல் ஆவணங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் நிலங்கள் பற்றிய ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா அடங்கல் முழு வரைபடம் போன்ற பல்வேறு முக்கிய ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு தேவையானபோது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் காலமாற்றத்தால் அனைத்து ஆவணங்களும் சிறிது, சிறிதாக கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது கணினி சிட்டா நகல் முழு வரைபடங்கள் போன்றவற்றை ஆன்லைனில் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லாமல் ஆன்லைனிலேயே பெற்று வந்தனர். அடங்கல் நகல் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்படுவதால் கையால் எழுதப்பட்ட அடங்கல் நகலை விவசாயிகள் நேரடியாக சென்று பெற்று பயிர் காப்பீடு மற்றும் வங்கி கடன் உதவி போன்றவைகளை பெற்று வந்தனர்.

தற்சமயம் அவற்றையும் இ-அடங்கலாக பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கிராம நத்தம் வீட்டு மனைகள் காலி மனைகள் போன்றவை ஆன்லைனில் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால் பட்டா மாறுதல் செய்யும்போது பழைய முறையிலேயே மேனுவலாக பட்டா மாற்றம் செய்யப்படுகிறது. இதனையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டால் பொதுமக்கள் ஆன்லைனிலேயே இந்த ஆவணங்களை சுலபமாக பெற்றுவிடுவார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாகி வருகிறது. அதேபோல் தாலுகா அலுவலகத்தில் அனைத்து வகையான சான்றிதழ்களும் கணினிமயம் ஆகிவிட்டன. இதனால் பொதுமக்களுக்கு வீணான அலைச்சலும், பொருட்செலவும் மிச்சப்படுகிறது. ஆனால் நத்தம் மனை பட்டாக்கள் மற்றும் இன்னும் மேனுவல் ஆகவே வழங்கி வருகின்றனர். இதனையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டால் மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். காலதாமதமும் அலைச்சலும் குறையும் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் மேனுவல் ஆவணங்கள் கிழிந்து போய்விடுகிறது. எனவே நத்தம் பட்டாக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED நெற்பயிரில் குலநோய் தாக்குதல் தீவிரம்