×

டிஏவிஆர் எனும் நவீன இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை

மதுரை, நவ. 8: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ‘டிரான்ஸ் கத்தீட்டர் அவோட்ரிக் வால்வு ரீபிளேஸ்மென்ட் (டிஏவிஆர்)’ என்ற நவீன இதயவால்வு மாற்று அறுவை சிகிச்சையை மிகக் குறைந்த கீறல்களுடன் 71 வயதான ஒரு நோயாளிக்கு செய்து சாதித்திருக்கிறது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துமவனை டாக்டர்கள் எஸ். செல்வமணி, பி. ஜெயபாண்டியன், எம். சம்பத்குமார், என். கணேசன், ஆர்.சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது: டிஏவிஆர் என்பது, அறுவை சிகிச்சை இன்றி, இதயத்தின் வால்வுகளுள் ஒன்றை மாற்றிப் பொருத்துவதாகும். கால் அல்லது தொடைக்கு அருகே உள்ள பகுதியிலிருக்கும் பொருத்தமான ரத்த நாளத்திலிருந்து செயற்கை வால்வு எடுக்கப்பட்டு இதயத்திற்கு அனுப்பப்படுகிறது. இது நோய் பாதித்த வால்வு அமைவிடத்திற்குள் செலுத்தி மாற்றிப் பொருத்தப்படுகிறது.

இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 13 சதவிகித மக்கள் இருதய நோயால் அவதியுறுகின்றனர். இதயத்தின் பெருநாடி சுருங்குவது போன்ற மிக தீவிரமான பிரச்சனைகளுக்கு திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை அவசியப்படலாம். இதற்கு 70 வயது கடந்தவர்கள், உயர் இடருள்ளவர்களுக்கு இதனை செய்வது சிக்கல். இவ்வகையினருக்கு டிஏவிஆர் சிகிச்சை முறையில் அறுவைசிகிச்சை ஏதும் செய்யாமலேயே சிகிச்சையளித்து குணப்படுத்தலாம். மயக்க மருந்து தருவதில்லை. ரத்த இழப்பும் குறைவு. முன்பே இதய அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு இதுவே பாதுகாப்பானது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு 3 மணி நேரத்திற்குள் வழக்கமான உணவு உண்ணலாம். மறுநாளே நடக்கலாம். 48 மணி நேரத்தில் வீடு திரும்பலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு