×

மேலூர் அருகே சாலை பணி தாமதத்தால் கிராம மக்கள் அவதி

மேலூர், நவ. 8: மேலூர் அருகே புதிய சாலை பணிகள் அமைக்கும் பணி துவங்கிய நிலையில் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் தினசரி பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக அளவில் கிராம சாலைகளை மேம்படுத்துவதற்காக அரசு ரூ.585 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில ஊராட்சிகளில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஏற்கனவே இருந்த தார்ச்சாலைகளை பெயர்த்து விட்டு புதிய சாலைகள் அமைக்கும் பணியும் துவங்கியது. 3 மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்பணிகள் முடிவடையாமல் உள்ளதால், அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் டூவீலர் மற்றும் கார், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடுமாறும் நிலை உள்ளது. பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து வந்த பிறகே பஸ்சில் ஏற வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக வஞ்சிநகரத்தில் இருந்து கலப்பாறை சாலை, கலப்பாறையில் இருந்து பால்குடி வழியாக கச்சிராயன்பட்டி கணேசபுரம் வரையிலான சாலை, கொடுக்கம்பட்டி கிழவினிக்கரைப்பட்டி சாலை, சேக்கிபட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.

பால்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் யாசின் கூறியதாவது: கல்பாறையில் இருந்து கச்சிராயன்பட்டி கணேசபுரம் வரை புதிய சாலை அமைப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு, சாலை அமைப்பதற்காக குண்டு கற்கள் கொட்டப்பட்டது. அதன் பிறகு அதை அப்படியே விடப்பட்டு விட்டதால், டூவீலர் கூட அவ்வழியாக செல்ல முடியவில்லை. பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் இந்த பாதையில் வர முடியவில்லை. 3 கிமீ., தூரம் வரை நடந்து சென்றே பஸ்சில் ஏற வேண்டிய நிலை உள்ளது’ என்றார். சேக்கிபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் அசாரூதின் கூறியதாவது: சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. முதல்வர் தனிப்பிரிவில் தற்போது புகார் செய்துவிட்டு காத்திருக்கிறோம். இப்பகுதியில் ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை உரிய தரத்துடன் போடும்படி வற்புறுத்தியதுடன், சரியான சாலை அமைக்காவிட்டால் அப்பணிகளை நடக்க அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆளுங்கட்சியினரின் உத்தரவின் பேரில் தகுதியற்ற, போதிய ஆட்கள், உபகரணங்கள் இல்லாத காண்ட்ராக்டர்களிடம் இப்பணிகள் வழங்கப்படுவதாலேயே இது போன்று நடக்கிறது. பெயரளவிற்கு சாலையை அமைக்காமல், தரமான சாலையை அமைக்காவிட்டால் இப்பகுதி மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம்’ என்றார்.

Tags : road delays ,Melur ,
× RELATED மாநில செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்