×

மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பேவர் பிளாக்கை அகற்றி கருங்கல் பதிப்பது ஏன்?

மதுரை, நவ. 8: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சித்திரை வீதிகளில் நன்றாக இருந்த பேவர் பிளாக்கை அகற்றி, புதிதாக கருங்கல் பதிப்பது ஏன்? என்று நேரில் பார்வையிட்ட திமுக எம்.எல்.ஏ. பழனிவேல்தியாகராஜனின் சரமாரி கேள்விக்கு மாநகராட்சி அதிகாரிகள் மழுப்பலாக பதில் கூறினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி 4 சித்திரை வீதிகளிலும் பேவர் பிளாக் பதிக்கப்பட்டு இருந்தது. இந்த வீதிகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, மக்கள் நடந்து செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் நடந்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். இந்த சூழலில் நன்றாக இருந்த இந்த பேவர் பிளாக்குகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மாநகராட்சி தோண்டி எறிந்துவிட்டு, புதிதாக டைல்ஸ் வடிவிலான கருங்கல் பதிக்கிறது.

இந்த பணிகளை மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி நகர பொறியாளர் அரசு உள்ளிட்ட அதிகாரிகளிடம், “நன்றாக இருந்த பேவர் பிளாக்கை தோண்டி எறிந்தது ஏன்? பேர் பிளாக்கிற்கு கீழ் இருந்த மணல் எங்கே மாயமானது? அகற்றப்பட்ட பேவர் பிளாக் எங்கே? புதிதாக கருங்கல் பதிப்பதால், நடந்து செல்லும் பக்தர்களுக்கு கால் சுடுமே? போன்ற கேள்விகளை எழுப்பினார். இதற்கு அதிகாரிகள், “அழகுக்காக புதிதாக கல் பதிக்கப்படுகிறது, நடந்து செல்வோருக்கு கால் சுடாமல், விரிப்பும் விரிக்கப்படும்” என மழுப்பலாக பதில் கூறினர். உடனே எம்.எல்.ஏ, குறுக்கிட்டு, “அழகுக்காக கல் பதித்துவிட்டு, அதற்கு மேல் விரிப்பு என்பது ஏற்க கூடியதா?” என்றதும் அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் மவுனம் சாதித்தனர்.

இதை தொர்ந்து எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, “மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அதிகாரிகள் இஷ்டத்துக்கு லாப நோக்குடன் முடிவுகள் எடுத்து வீண் செலவு செய்கிறார்கள். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் கோயிலை சுற்றி நன்றாக இருக்கும் பேவர் பிளாக்கை தோண்டி, புதிய கல் பதிப்பது ஆதாய நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது” என்றார்.

Tags : Meenakshi Amman Temple ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி...