தாளடி நெற்பயிரில் மகசூலை அதிகரிக்க இயற்கை உரமாக இலைகளை பயன்படுத்தும் விவசாயிகள்

கும்பகோணம், நவ. 8: கும்பகோணம் அருகே தாளடி நெற்பயிரில் மகசூலை அதிகரிக்க இயற்கை உரமாக இலைகளை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்மோட்டார் மற்றும் ஆறு, வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மாதம் விதை தெளித்து கடந்த சில நாட்களுக்கு முன் நாற்றுகளை பறித்து வயலில் நடவு செய்து வருகின்றனர். சம்பா, தாளடி நடவுப்பணி 50 சதவீதம் முடிந்துள்ளன.நெற்பயிருக்கு தெளிக்கும் ரசாயன உரத்தால் மனிதர்களுக்கு கேன்சர், முட்டுவலி போன்ற பல்வேறு நோய்கள் உருவாவதற்கு வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு கும்பகோணம் அடுத்த ஆரியப்படையூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர் குறுவை சாகுபடி முடிந்தவுடன் தாளடி சாகுபடியில் அதிக விளைச்சலுக்காகவும், இயற்கை முறையில் நெல்மணிகளை விளைச்சலாக்க வேண்டும் என்று வயல்களின் ஓரத்தில் உள்ள மரங்களின் இலைதழைகளை வயலில் மேலுரமாக போட்டுள்ளார். இதனால் மக்களுக்கு சத்துள்ள ரசாயன உரங்களை வழங்க முடியும் என்று அந்த விவசாயி தெரிவிக்கிறார்.

இதுகுறித்து விவசாயி கூறுகையில், குறுவை சாகுபடி செய்தவுடன் மற்றொரு நெல் சாகுபடிக்கும் 20 நாட்கள் இடைவெளி கொடுக்க வேண்டும். தாளடி சாகுபடிக்கு வேம்பு, புங்கன், அரசு, ஆல,அகத்தி என நிலத்தை சுற்றி இருக்கும் மரங்களில் இருந்து இலைகளை வெட்டி நிலம் முழுவதும் பரப்பி விட்டு தண்ணீர் கட்டி ஒரு வாரம் அழுக விட்டு மீண்டும் உழவு செய்து நடவு வயலை தயார் செய்ய வேண்டும்.நெல்லுக்கு ரசாயன உரங்களை பயன்படுத்தும்போது அதன் வளர்ச்சி இயல்ன நிலையில் இல்லாமல் அதீதமாக ஏற்படும். இந்த வளர்ச்சியால் இலைகளின் வண்ணம் லேசாக மாறி பூச்சிகளுக்கு உண்டாகும். ரசாயனங்களுக்கு அதிக செலவும் செய்ய வேண்டியிருக்கும்.மேலும் இரண்டு முறைகளை எடுத்த பிறகு மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு தொழு உரம் அல்லது மண்புழு உரத்தோடு வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மாதம் ஒருமுறை அமுத கரைசல் அல்லது ஜீவாமிர்த கரைசலை தண்ணீரோடு கலந்து விடலாம். பயிரின் வளர்ச்சியை பொறுத்து தண்ணீருடன் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் இயற்கை முறையில் சாகுபடி செய்தால் அதிக விளைச்சலையும், தரமான நெற்மணிகளையும் பொதுமக்களுக்கு வழங்கி நோய்கள் உருவாகாமல் காப்பாற்ற முடியும் என்றார்.

Related Stories: