திருச்சிற்றம்பலம் பகுதியில் 3 கோயில்களில் பணம் கொள்ளை

பேராவூரணி, நவ. 8: பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள 3 கோயில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது.பேராவூரணி திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு, சித்து குளக்கரையில் பாக்கிய சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் சமீபத்தில் தான் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு இக்கோவிலில் புகுந்த மர்மநபர்கள் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். களத்தூர் முத்துமாரி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன், காத்தயி அம்மன் ஆகிய அம்மன் சன்னதிகளில் இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளளையடிக்கப்பட்டது.

Advertising
Advertising

இவைதவிர களத்தூர் அய்யனார் கோயில், சன்னாசி கோயில்களிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஆனால் 2 கோயில்களிலும் எதுவும் திருட்டு போகவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசில் சித்துக்காடு மற்றும் களத்தூர் கிராம மக்கள் புகார் செய்துள்ளனர். மேலும் சித்துக்காடு பாக்கிய சித்தி விநாயகர் கோயிலில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயலும் காட்சி, கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ஆதாரங்களுடன் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் துரைராசு, திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்துள்ளார். திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள 5 கோயில்களில் ஒரே நேரத்தில் கொள்ளை சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: