×

அட்மா திட்டத்தின்கீழ் மக்காச்சோள பயிரில் படைப்புழு கட்டுப்படுத்தும் பயிற்சி முகாம்

தா.பழூர், நவ. 8: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிரில் ராணுவ படைப்புழு கட்டுப்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி நடந்தது. வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா பேசும்போது, மக்காச்சோள பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு தாக்குதலை கோடை உழவு செய்யும் எளிய தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்தப்புழு பயிர்களுக்குள்ளும் இலை குருத்து ஆகியவற்றிலும், மண்ணுக்குள்ளும் சென்று மறைந்து கொள்வதால் இதை கட்டுப்படுத்துவது சிரமமானதாக உள்ளது.எனினும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விட உயிரியல் மருந்துகளான ‘பெவேரியா பேசியானா”,’மெட்டாரைசியம்”,’பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்” மற்றும் என்.பி.வைரஸ். டிரைகோகிரம்மா ஒட்டுண்ணி, பொறிவண்டுகள் போன்றவை படைப்புழுக்களை திறம்பட கட்டுப்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த புழுக்களை கட்டுப்படுத்த இண்டாக்சோ கார்ப் பூச்சிக்கொல்லியை லிட்டருக்கு 1 மி.லி அல்லது இமாமெக்ட்டின் பென்சோயேட் என்ற பூச்சிக்கொல்லியை லிட்டருக்கு 0.4 கிராம் என்ற அளவிலும் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் வயல்களில் தெளிக்க வேண்டும் என்றார்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் பேசும்போது, படைப்புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்கிற நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியை லிட்டருக்கு 2 மி.லி என்கிற அளவில் புழு ஆரம்ப வளர்ச்சி நிலையில் உள்ளபோது தெளிக்க வேண்டும். விளக்கு பொறிகள் ஏக்கருக்கு 1 அல்லது 2 என்ற எண்ணிக்கையில் மாலை 7 மணி முதல் 9 மணி வரை வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
இன கவர்ச்சிபொறி மற்றும் மக்காச்சோள பயிருடன் ஊடுபயிர் அல்லது வரப்பு பயிராக ஆமணக்கு, சூரியகாந்தி மற்றும் பயறுவகை பயிர்களான உளுந்து, துவரை போன்ற பயிர்களை பயிரிட வேண்டும். வயல்களை சுற்றிலும் களைகள் இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும் என்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் உஷர் நன்றி கூறினார்.

Tags : Maize Control Training Camp ,Adm ,Maize Under ,
× RELATED அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்