×

பழநி குடிமராமத்து பணியில் பல லட்சம் முறைகேடு

பழநி, நவ. 8: பழநி பகுதியில் குடிமராமத்து பணியில் பல லட்சம் முறைகேடு நடந்திருப்பதாக முதல்வருக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூபாய் 34.35 கோடி மதிப்பீட்டில் 114 குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் கரிசல்குளம், செங்குளம் ஆகியவை உள்ளது. இதன் மொத்த பரப்பு 300 ஏக்கர் ஆகும். அரசு சார்பில் கரிசல்குளம், செங்குளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இதன் தலைவராக அதிமுகவை சேர்ந்த கந்தசாமி என்பவர் உள்ளார். இக்குளத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 25.50 லட்சத்தில் பணிகள் நடந்து வருகிறது. சங்கத்தின் தலைவர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடந்தையுடன் பல லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக தமிழக முதல்வருக்கு இச்சங்கத்தின் உறுப்பினர்கள் எம்.கருப்புச்சாமி, கே.கருப்புச்சாமி ஆகியோர் புகார் மனு அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குளத்தில் பணிகள் துவங்குவதற்கு முன்பே தனிநபருக்கு குடிமராமத்து பணிகளை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சப்.கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கரிசல்குளத்தில் கடந்த ஆண்டே விவசாயிகளால் மண் ஓட்டி சமப்படுத்தப்பட்டது. அதை சமப்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தற்போது சரிசெய்ததுபோல் அளவீடு எடுத்து விட்டனர். செங்குளத்தின் கரைகளை பலப்படுத்த பகலில் 200 டிராக்டரில் மண் எடுத்து கரைக்கு ஓட்டி விட்டனர். இரவில் 1000 டிப்பர் லாரிகளுக்கு மேல் மண் எடுத்து நல்ல விலைக்கு வெளியில் விற்று காசு பார்த்து விட்டனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் முருகேசனுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டும் காணாமல் இருந்து விட்டார்.

கரிசல்குளம் வரத்து வாய்க்கால் ராமபட்டினம்புதூர் என்ற இடத்தில் நல்லதங்காள் ஓடையில் இருந்து பிரிந்து வருகிறது. வரத்து வாய்க்காலின் இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பணம் பெற்றுக் கொண்டு கரையின் மீது சாலை அமைத்து கொடுத்து விட்டனர். ஆக்கிரமிப்பு விவசாயிகளிடமிருந்து பணம் பெற்று கரையை பலப்படுத்திவிட்டு, பொதுப்பணித்துறையால் ஒதுக்கப்பட்ட பணத்தை முறைகேடு செய்து விட்டனர். எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவ சங்கத்தலைவர் மற்றும் உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் பணிகளை அளவீடு செய்ய வெளி மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை நியமித்து, அறிக்கை வரும் வரை வங்கி கணக்கை முடக்கி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்