×

மஞ்சளாறு அணை தண்ணீர் கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

வத்தலக்குண்டு, நவ. 8: மஞ்சளாறு அணை தண்ணீரை திறக்க கோரி வத்தலக்குண்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, ஆலங்குளம் உள்பட 10 ஊர்கள் பழைய ஆயக்கட்டு பகுதியாகும். இப்பகுதி விவசாய நிலங்களுக்கு ஆண்டுதோறும் 135 நாட்கள் மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தற்போது அணையின் மொத்த கொள்ளளவு 57 அடியில் 55 அடி தண்ணீர் உள்ளது. முதலில் உபரி நீரை மட்டும் வெளியேற்றிய பொதுப்பணித்துறையினர் பின்னர் தமிழக அரசின் உத்தரவுப்படி பாசனத்திற்காக 60 கனஅடி தண்ணீரை திறந்து விட்டனர். இந்த தண்ணீர் வரும் வழியில் உள்ள கண்மாய்களில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் நேரிடை பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கடந்த வாரம் பெய்து கொண்டிருந்த மழையும் நின்று விட்டது. மேலும் அணையிலிருந்தும் தண்ணீர் வராததால் இப்பகுதியில் விவசாய பணிகளை துவங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பகுதி விவசாய நிலங்களில் நேரிடை பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி தமிழக விவசாயிகள் கூட்டமைப்பினர் நேற்று வத்தலக்குண்டு மஞ்சளாறு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட கோரி கோஷமிட்டனர். பின்னர் அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர் வந்தவுடன் எடுத்து கூறுகிறோம் என போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர். அதன்பிறகே அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், ‘முதல்வர் உத்தரவை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினோம். விரைவில் பழைய ஆயக்கட்டு நேரிடை பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நவ.12ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு காளியம்மன் கோயில் அருகே பொதுப்பணித்துறையினரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

Tags : office ,Manjalachar Dam ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...