×

கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் 46 ஏழை குடும்பத்தினருக்கு மனைபட்டா வழங்க கோரிக்கை

கொள்ளிடம், நவ.8: நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் 46 குடும்பத்தினருக்கு சொந்த வீட்டு மனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் வலது கரையையொட்டி 46 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 200 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள 46 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூங்கில்கூடைபின்னுதல், துப்புரவுத்தொழில் மற்றும் செப்டிங்டேங்க் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வரும் இவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஒரே இடத்தில் குடிசை வீடுகளில் பாதுகாப்பற்ற முறையில் வசித்து வருகின்றனர். ஆரம்ப காலத்திலிருந்து சொந்த மனைப்பட்டா இல்லாமல் ஆற்றங்கரையோரத்தில் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருந்தால், இங்குள்ள அனைத்து குடியிருப்பு வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் தண்ணீர் வடியும் வரை அரசால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியிருந்து தண்ணீர் வடிந்த பிறகுதான் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதனால் இங்குள்ளவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சில நேரங்களில் அதிகாரிகள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வெளியேறும் படியும் வற்புறுத்துகின்றனர். அனைத்து உரிமைகளையும் பெற்று வந்தாலும், தங்கி வசித்து வருவதற்கு நிரந்தரமான சொந்த மனைப்பட்டா ஒருவருக்கும் இல்லை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து கொள்ளிடம் சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் 46 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆரம்ப காலத்திலிருந்து இதுவரை சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல் அரைகுறை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் மக்கள் பிரதிநிதிகளாக போட்டியிடுவோர் வாக்கு கேட்டு வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை நிலைமையைப் பற்றி கொஞ்சம் கூட கண்டு கொள்வது இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மிகவும் ஏழ்மை நிலையில் அடிப்படை வசதியின்றி குழந்தைகளுடன் சிரமத்துடன் வாழ்ந்து வரும் 46 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அரசு உடனடியாக வேறு இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்கி அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : families ,river bank ,
× RELATED நில புரோக்கர் பரிதாப பலி