×

திருப்பூரில் ஒரு வழிச்சாலைகளில் விதிமீறும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்து

திருப்பூர்,நவ.8:  திருப்பூர் பி.என்., ரோடு புஷ்பா தியேட்டர் முதல், 60 அடி ரோடு சந்திப்பு வரை, பார்க் ரோடு, புதுமார்க்கெட் வீதி, மங்கலம் ரோடு - தாடிக்காரமுக்கு கடை வரை, நடராஜ் தியேட்டர் ரோடு - டவுன்ஹால் சந்திப்பு வரை, குமரன் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகள் ஒரு வழியாக்கப்பட்டுள்ளன. வாகன நெருக்கடியை குறைக்கவும், விபத்தை தவிர்க்கவும் இவ்வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘ஒன் வே’ வழித்தடங்களில் வாகன ஓட்டிகள் பலரும் விதிமீறி எதிரில் அதிவேகமாக வருவதால் அடிக்கடி, விபத்து ஏற்படுகிறது. மில்லர் ஸ்டாப் முதல் மேட்டுப்பாளையம் வரை, டூவீலர் மட்டுமின்றி, கார்களும், வேன்களும் எதிரில் வருவதால் திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் திக்குமுக்காடுகின்றன. நஞ்சப்பா பள்ளி வழியாகவும், குமரன் ரோடு வழியாகவும் டூவீலர்களில் வரும் சிலர், பார்க் ரோடு வழியாக வந்து, விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

அதேபோல் புதுமார்க்கெட் வீதி, குமரன் ரோடு பகுதியிலும் எதிரில் வரும் வாகனங்களால் நெரிசலும், விபத்துகளும் தொடர்கின்றன. ஒருவழியாக்கப்பட்ட ரோடுகளில், இருபுறமும் கடைகள் உள்ளதால், ரோட்டோரங்களை வாகனங்கள் ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துகின்றன. அத்துடன் எதிரில் வரும் வாகனங்களும் நெரிசலை இரட்டிப்பாக்கி திணறடிக்கிறது. சில இடங்களில், ரோடு டிவைடர் வழியாக, குறுகிய ரோடுகளில், வாகனங்களுக்கு குறுக்கில் புகுந்து செல்லும் பாதசாரிகளும் விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒரு வழித்தடங்களில் ‘நோ என்ட்ரி’ அறிவிப்பு பலகையை வாகன ஓட்டிகள் பலரும் கண்டுகொள்வதே இல்லை. விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தால் மட்டுமே பிரதான ரோடுகளில் விபத்தையும் நெரிசலையும் தவிர்க்க முடியும். மேலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவோர் மீதும், ரோட்டை ஆக்கிரமிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,motorists ,Tirupur ,roads ,
× RELATED கொரோனா பாதித்த விமானியிடம் விதிகள்...