×

ஆன்லைன் வர்த்தக விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும்

திருப்பூர், நவ.8:  ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதித்துள்ள நிலையில் மண்டி என்ற பெயரில் விளம்பர படங்களில் யாரும் நடிக்க கூடாதென திருப்பூர் மாவட்ட சிறு மற்றும் குறு வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில துணைத்தலைவர் பூமிநாதன், திருப்பூர் மாவட்ட சிறு மற்றும் குறு வியாபாரிகள் சங்கத்தின்  மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட பெரும் நிறுவனங்களின் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் உணவு பொருட்களை இல்லத்திற்கே கொண்டு வந்து கொடுக்கின்றனர்.

இதனால் சிறு உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் மண்டியில் உணவு தானிய பொருட்களை இருப்பு வைத்து ஆன்லைன் மூலம் மலிவான விலைக்கு உங்கள் இருப்பிடத்திலேயே வாங்கிக்கொள்ளலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இது எளிதில் பாமர மக்களின் மனதில் நிரந்தரமாக பதியக்கூடியதாக உள்ளது. சிறு, குறு வியாபார நிறுவனங்கள் பாதிக்கக்கூடிய வகையில் நடிகர்கள் யாரும் நடிக்கக்கூடாது. நடிகர் விஜய்சேதுபதி மண்டி விளம்பர படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  இதுபோன்ற விளம்பரங்கள் வரும் பட்சத்தில் அதில் நடித்துள்ள நடிகர்களின் வீட்டு முன்பு வியாபாரிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Actors ,
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...