×

திருப்பூர் பெரியார் காலனியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிப்பு

திருப்பூர், நவ.8:  திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதை கண்டித்து பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அவினாசி ரோடு காந்திநகர், பெரியார்காலனி, அனுப்பர்பாளையம்புதூர், 15 வேலம்பாளையம், பி.என்.ரோடு பிச்சம்பாளையம், போயம்பாளையம், பூலுவப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதுடன், ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி மழைநீருடன் கழிவுநீரும் ரோட்டில் பாய்ந்தது. திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்திநகர் கருப்பராயன்நகரில் போதுமான வடிகால் வசதி இல்லாததால் பாண்டியன்நகர், பூலுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய மழைநீர் மற்றும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நனைந்து சேதமடைந்தன.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் மழை காலங்களில் இதே பிரச்னை நீடிப்பதால் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் 29-வது வார்டுக்குட்பட்ட பிச்சம்பாளையம்புதூரை அடுத்த கே.ஜி.நகரிலும் மழைநீர் வெளியேறும் அளவுக்கு போதுமான வடிகால் வசதி இல்லாததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று மழைநீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.

மேலும் 6-வது வார்டுக்குட்பட்ட பெரியார்காலனி டி.டி.பி.மில் ரோட்டை அடுத்த நடராஜ் லே-அவுட் 4-வது வீதியில் மழைநீர் வடிகால் வசதி அமைத்து கொடுக்கப்படாததால் அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுடன், வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்நிலையில் நேற்று காலை மழைநீர் வடிகால் வசதி அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று மழைநீரை அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tirupur Periyar ,
× RELATED சிவகங்கை மாவட்டம் கீழடியில்...