×

அரசு பள்ளியில் போதிய வகுப்பறைகள் இருந்தும் ரூ.33 லட்சத்தில் புதிய கட்டிடம்

பந்தலூர், நவ. 8: பிதர்காடு கொட்டட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இருக்கும் நிலையில் ரூ.33 லட்சத்தில் மீண்டும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பந்தலூர் அருகே பிதர்காடு கொட்டட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் 110 மாணவர்களுக்கு அனுமதியுள்ளது. இதில் 22 மாணவர்கள் மட்டுமே தற்போது வருகை பதிவேட்டில் உள்ளனர். அதிலும் தினந்தோறும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை 8ஆக உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

8 மாணவர்கள் மட்டுமே தற்போது படித்து வரும் நிலையில் அவர்களுக்கு ஒரே வகுப்பில் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகளில் பழங்குடியினர் கிராமங்கள் இருந்தும் பள்ளிக்கு  தினமும் செல்லாமல் இடை நிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையறிந்த கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்  பழங்குடியினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தற்போது உள்ள 8 மாணவர்களுக்கு ஒரே வகுப்பறை போதுமானதாக உள்ள நிலையில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 8 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் உள்ளது. தற்போது புதிய கட்டிடம் கட்டப்படுவது அரசு பணம் தேவையில்லாமல் விரையம் செய்யும் நடவடிக்கையாகும். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு மேற்கொண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : school building ,classrooms ,
× RELATED துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி...