×

மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்தபோதிலும் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைவு

ஊட்டி. நவ. 8: நீலகிரி மாவட்டத்தில் மழை அதிகரித்தபோதிலும், அணைகளில் சேறும், சகதியும் நிறைந்து தண்ணீர் அதிகம் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. அதேபோல் டனல்களில் அடைப்பு ஏற்பட்டதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான மலைகளில் இருந்து ஆறுகள் மற்றும் நீரோடைகள் உற்பத்தியாகி சமவெளிப் பகுதிகளை சென்றடைந்தன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்  மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆறுகள் மற்றும் நிரோடைகளை மறித்து அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டன. ேமலும், அங்காங்கே நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தியும் செய்யப்பட்டது. மாவட்டத்தில் குந்தா மின் உற்பத்தி வட்டத்திற்குட்பட்ட குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி, காட்டுக்குப்பை, சிங்காரா, மாயார், பைக்காரா, முக்குறுத்தி ஆகிய பகுதிகளில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டது. துவக்க காலத்தில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால், நாளடைவில், அணல், அணு மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் வந்த பின், நீர் மின் நிலையங்கள் பேக்கப் மின் நிலையங்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவைகள் பீக் அவர்ஸ் எனப்படும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், காலை 6 மணி முதல் 9 மணி வரையுமே அதிகம் இயக்கப்படுகிறது. மற்ற சமயங்களில் மின் விநியோகம் சமன் செய்ய இந்த மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தேவையான அளவை காட்டிலும் மழை அதிகம் பெய்த போதிலும், மின் உற்பத்தி வழக்கத்தை விட குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உற்பத்தி செய்யப்பட்ட மின் உற்பத்தி, கடந்த 2018ம் ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது. காரணம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, குந்தா, கெத்தை போன்ற அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ஒவ்வொரு அணைகளில் இருந்தும் மற்றொரு நீர் மின் நிலையம் மற்றும் அணைக்கு செல்லும் சுரங்க பாதைகளில் (டனல்கள்) சேறும், சகதியும் நிறைந்து காணப்பட்டதால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு கடந்த ஆண்டை காட்டிலும் 441 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் இறுதி வரை குந்தா மின் உற்பத்தி வட்டத்தில் 1571 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.  ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 1130 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், இம்முறை அதிக மழை பொழிவு கிடைத்தபோதிலும், குந்தா மின் உற்பத்தி வட்டத்திற்குட்பட்ட குந்தா, அவலாஞ்சி, காட்டுக்குப்பை மின் நிலையங்களுக்கு செல்லும் சுரங்க பாதைகள் மற்றும் அணைகளில் சேறும், சகதியும் நிறைந்து காணப்பட்டதால், இதனை சீரைமக்க அடிக்கடி மின் உற்பத்தி நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டை காட்டிலும், மின் உற்பத்தி இம்முறை குறைந்துள்ளது என்றனர்.

Tags : hydroelectric power plants ,district ,rainfall ,
× RELATED சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின்...