×

பன்னிமேடு மற்றும் மேட்டுச்சேரி பகுதியில் நிலச்சரிவு அபாயம்

மஞ்சூர், நவ.8: நிலச்சரிவு அபாயத்தால் குந்தா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மாற்றிடம் வழங்குவது தொடர்பாக வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  மஞ்சூர் அருகே உள்ளது குந்தா பாலம். இங்குள்ள பன்னிமேடு மற்றும் மேட்டுச்சேரி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் சரிவான பகுதியில் அமைந்துள்ளதால் புயல் மற்றும் பருவமழை காலங்களில் வீடுகள் இடிவதும், மண் சரிவுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையில் இப்பகுதியில் ஏராளமான வீடுகளின் முன் மற்றும் பின்புறங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டது. தடுப்புச்சுவர்கள் இடிந்ததால் குடியிருப்புகளின் வாசல்கள் சரிந்து விழுந்தது.  இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பன்னிமேடு பகுதியில் நிலச்சரிவு அபாயத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை முடியும் வரை அங்குள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குந்தா பகுதியில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் பொதுமக்கள் தங்களுக்கு பாதுகாப்பான மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்கள். இதை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் துறையினருக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதன்படி குந்தா தாசில்தார் சரவணன் தலைமையில், கிராமநிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்துறையினர் குந்தாபாலத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான மாற்றிடம் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு கலெக்டரின் அனுமதியோடு பொதுமக்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED 10 ஆயிரம் மரங்களை காவு வாங்கியது ‘கஜா’ : நிலச்சரிவு அபாயத்தில் கொடைக்கானல்