×

பூங்காக்கள் சிறந்த முறையில் பராமரிப்பு மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கு சான்று

ஊட்டி, நவ. 8: மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவை சிறந்த முறையில் பராமரித்ததற்காக டெல்லியை சேர்ந்த ஸ்காட்ச் அமைப்பு சார்பில் நீலகிரி தோட்டக்கலைத்துறையினருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை உள்ளன. இது தவிர ஊட்டியில் மரவியல் பூங்கா உட்பட சில சிறிய பூங்காக்களும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த பூங்காக்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், பழமை வாய்ந்த இப்பூங்காவை பழமை மாறாமலும் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் இயங்கி வரும் ‘ஸ்காட்ச்’ என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள பூங்காக்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு  வருவதாக அறிவித்துள்ளது.

இதற்காக பாரம்பரிய மிக்க பூங்கா என்ற சான்றிதழை நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கு டெல்லி ஸ்காட்ச் அமைப்பு வழங்கியுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், டெல்லியில் உள்ள ஸ்காட்ச் அமைப்பு ஆண்டு தோறும் இந்தியாவில் உள்ள பூங்காக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு  நிறுவனங்களை சேர்ந்தவைகள் தேர்வு செய்து, ஆய்விற்கு பின் அவைகளுக்கு சான்று  வழங்குகிறது.
இந்த ஆண்டிற்கான ஆய்வு கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில், சிறந்த முறையில் பூங்காக்களை பராமரித்தற்காக நீலகிரி தோட்டக்கலைத்துறைக்கு சான்று வழங்கியுள்ளது. மேலும், நுண் நீர் பாசன திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தியதற்கும், ‘இ’ தோட்டம் செயலி அறிமுகம் செய்ததற்காகவும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காகவும் சிறந்த நிறுவனத்திற்கான சான்றும் நீலகிரி தோட்டக்கலைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது, என்றனர்.

Tags : Parks ,care district horticulture department ,
× RELATED ஜிம்கள், பூங்காக்கள் மூடப்பட்டதால்...