×

மழையின்றி இதமான காலநிலை எதிரொலி பைக்காரா அணையில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி. நவ. 8: கடந்த ஒரு வார காலமாக மழையின்றி இதமான காலநிலை நிலவி வரும் நிலையில் ஊட்டி பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இரு மாதங்களுக்கு மேலாக நல்ல மழை பெய்தது. அதன்பின் அக்ேடாபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. 3 மாதங்களுக்கும் மேலாக பெய்த மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர் நிலைகள் உள்ளிட்டவைகள் முழு கொள்ளலவை எட்டின.
மின் உற்பத்திக்கு ஆதாரமான அணைகளில் ஒன்றான பைக்காரா அணையையும் முழு கொள்ளளவை எட்டி தற்போது கடல போல் காட்சியளிக்கிறது. வனப்பகுதிகளுக்கு நடுவே ரம்மியமாக காட்சியளிக்கும் பைக்காரா அணையில் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது.  

இப்படகு இல்லத்தில் 20 மோட்டார் படகுகளும், 5 அதிவேக படகுகளும் உள்ளன. இங்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் தண்ணீரை கிழித்து கொண்டு செல்லும் அதிவேக படகுகளில் செல்ல அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழையின்றி வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதனால் மீண்டும் பைக்காராவிற்கு சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். இதனால் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. அணை முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்து வருகின்றனர். குறிப்பாக ஸ்பீட் படகில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags : boat ride ,Paikara Dam ,
× RELATED கொரோனா இல்லாத கோவா; உள்ளூர் பயணிகள்...