விவசாயிகள் மறியல் தொடர்பாக மொடக்குறிச்சியில் ஆலோசனை கூட்டம்

மொடக்குறிச்சி, நவ.8:  உயர் மின்னழுத்த கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நீதி கேட்டு வரும் 18ம் தேதி 50 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் நடந்தது. விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் பவர் கிரிட் நிறுவனம் அமைத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு பதிலாக சாலையோரம் கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியும் உயர் மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பவர்கிரிட் நிறுவனம் காவல்துறை, வருவாய்த்துறையினரை கொண்டு விவசாய விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  விவசாயிகளின் கோரிக்கைகளை உள்ளடக்கிய புதிய சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தியும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி 13 மாவட்டங்களில் 50 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, மக்கள் சந்திப்பு பயணம், ஊர் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் அனைத்து கட்சி நிர்வாகிகள், வணிக அமைப்புகள், தொழில் கூடங்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சி அடுத்த கரியாக்கவுண்டன் வலசில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, ஈசன், மதிமுக ஒன்றிய செயலாளர் கோபால் புரட்சிகர இளைஞர் முன்னணி திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: