பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உயர்மட்டக் குழு

சத்தியமங்கலம், நவ.8: பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என சத்தியமங்கலத்தில் கலெக்டர் கதிரவன் கூறினார். சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, நகர்ப்பகுதியில் உள்ள சாலைகளில் குழி தோண்டி பைப்லைன் பதிக்கப்பட்டு பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் படித்துறை பகுதியில் கழிவு நீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின்மயானம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.பாதாளசாக்கடை திட்டத்தில் வரும் கழிவுநீர், பவானி ஆற்றில் கலக்க திட்டமிடப்பட்டுள்ளதால்  சத்தியமங்கலம் நகர்ப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும், சுத்திகரிப்பு நிலையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

Advertising
Advertising

இதையடுத்து, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமையில் இப்பிரச்னை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகள், அனைத்துக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், பவானி ஆற்றங்கரையில் பாதள சாக்கடை கழிவுகள் கலக்க கூடாது. ஆற்றங்கரையோரம் விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை நகர்ப்பகுதியில் இருந்து 5 கி.மீ தூரம் தள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கலெக்டர் கதிரவன், ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து சென்னையில் உள்ள பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்.

சத்தியமங்கலத்தில் இது தொடர்பாக ஒரு குழு அமைத்து கண்காணிக்கப்படும் என உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் ஈரோடு எஸ்பி சக்திகணேசன், கோபி ஆர்டிஓ ஜெயராமன், சத்தியமங்கலம் டிஎஸ்பி (பொ) தங்கவேலு,  சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், நகராட்சி ஆணையாளர் அமுதா, மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், திமுக நகர பொறுப்பாளர் ஜானகி, அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவகர் மற்றும் குடிநீர் வடிகால்வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள், அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: