×

சபரிமலை சீசன் துவங்குவதையொட்டி பெட்ஷீட் விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு, நவ. 8:  கார்த்திகை மாத சபரிமலை சீசன் மற்றும் பனிக்காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு ஈரோட்டில் பெட்ஷீட்விற்பனை சூடிபிடிக்க துவங்கி உள்ளது. ஈரோட்டில் திருவேங்கடசாமி, ஈஸ்வரன் கோயில், என்எம்எஸ் காம்பவுண்ட், தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பெட்ஷிட் குடோன்களும், மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெட்ஷீட் குடோன்களும் உள்ளன. ஈரோடு மாவட்டம் சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், பழையகோட்டை, சேலம் மாவட்டம் எடப்பாடி, கரூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் விசைத்தறி மற்றும் கைத்தறியால் பெட்ஷீட் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து ஈரோட்டில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த குடோன்களில், பெட்ஷீட் வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்திய பிரேதேசம், வட மாநிலங்களான மேற்கு வங்காளம், ராஜஸ்தான், போபால், டெல்லி, சூரத் உள்ளிட்ட பகுதிளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக பெட்ஷீட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், மழைக்காலம் மற்றும் பனிக்காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு ஈரோடு குடோன்களில், உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கார்த்திகை மாதம் துவங்க உள்ளதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் சபரிமலை சீசனுக்கு வியாபாரிகள் பெட்ஷீட்களை ஆர்டர் கொடுத்து அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து ஈரோடு பெட்ஷிட் குடோன்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பிரச்னையால் கடந்த 2 ஆண்டுகளாக பெட்ஷீட் உற்பத்தி, விற்பனை 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பெட்ஷிட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது அகமதாபாத் போன்ற பகுதிகளில் பிரிண்டட் பெட்ஷீட், பேன்சி ரக பெட்ஷீட்கள்  விற்பனை செய்து வருவதால் நம்ம ஊர் பெட்ஷீட்கள் விற்பனை குறைந்து விட்டன.

அதேபோல், நூல் விலையும் தொடர்ந்து சரிவடைந்து வருவதால், உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷிட்களின் விலையை குறைக்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால் வியாபாரிகளுக்கு குறைந்த லாபத்தில் விற்பனை செய்து வருகிறோம். இதில், சென்னிமலை பெட்ஷீட் (ஒன்று) ரூ.70 முதல் 300 ரூபாய் வரையிலும், வெள்ளகோவில் பெட்ஷிட் ரூ. 100 முதல் 200 ரூபாய் வரையிலும், கரூர் மாவட்ட பெட்ஷீட் ரூ.100 முதல் 250 வரையிலும் விற்பனை செய்கிறோம். சபரிமலை சீசன் துவங்க உள்ளதால், திருநெல்வேலி, மதுரை, நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து சிறு வியாபாரிகள் கடந்த சில நாட்களாக வர துவங்கி விட்டனர். அதேபோல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகளும் பெட்ஷீட் வாங்க வர துவங்கி உள்ளனர். அடுத்த வாரத்தில் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் சூடுபிடிக்க துவங்கி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BEDSHEET SALE ,SEASON ,
× RELATED கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக...