புலிகள் காப்பகத்தால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்த முடிவு

ஈரோடு, நவ. 8: தமிழகத்தில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் தங்களது வாழ்வாதாரமே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் புகார் கூறி வருகின்றனர்.குறிப்பாக, பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் விறகு பொறுக்குதல், கால்நடைகளை மேய்த்தல், நெல்லிக்காய், சீமார் புல் போன்ற வன மகசூல் மூலம் தான் தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால், இதற்கு வனத்துறை தடை விதிப்பதும், கட்டுப்பாடுகளை விதிப்பதாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண பல ஆண்டுகளாக போராடியும் வனத்துறையினர் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாமல் உள்ளதால் அனைத்து புலிகள் காப்பக பகுதியில் உள்ள பழங்குடியின மக்களையும் ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, தமிழ்நாடு புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி குணசேகரன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள பழங்குடி மக்கள் தங்களது உரிமைகளை முழுமையாக இழந்து அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வன உரிமைச்சட்டம் முற்றிலும் பறிபோய் உள்ளது.

வனத்துறையின் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து தற்போது புதிதாக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பின் முதல் கூட்டம் வரும்  12ம் தேதி தாளவாடி தலைமலை சாலையில் உள்ள தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, போராட்டம், உரிமைகளை நிலைநாட்ட தேவையான சட்டப்போராட்டங்கள் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இவ்வாறு குணசேகரன் கூறினார்.

Related Stories: