மது அருந்தினால் தண்டனை பாசன வாய்க்கால் கரையில் விவசாயிகள் எச்சரிக்கை பலகை

ஈரோடு, நவ.8:  ஈரோடு மாவட்ட காளிங்கராயன் வாய்க்கால் கரையில் மது அருந்தினால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என மது அருந்துபவர்களை எச்சரிக்கும் வகையில் விவசாயிகள் பேனர் வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் காளிங்கராயன்பாளையம் அணைக்கட்டுக்கு வந்தடைகிறது. காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த  பாசன பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். காளிங்கராயன் பாசன வாய்க்கால் கரையோரங்களில் பகல் மற்றும் இரவு நேரத்தில் மர்மநபர்கள் மது அருந்துவது வாடிக்கையாக  உள்ளது.

இந்த மர்மநபர்களால் விவசாயிகள் தங்களது நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள சென்று வரும் போது போதையில் அடிக்கடி தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும், சிலர் மது அருந்தி விட்டு வாய்க்கால் கரையோரமும், விவசாய நிலத்திலும் மதுபாட்டிலை உடைத்து போட்டு செல்வதால், அறுவடை பணியின் போது விவசாயிகள் கால்களில் உடைந்த மதுபாட்டில் சிதறல் குத்தி ரத்த காயத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், காளிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை கூட்டமைப்பினர் பொதுப்பணித்துறையினர் அனுமதியுடன் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் கருக்கம்பாளையம் வாய்க்கால் கரையோரம் மது அருந்துபவர்களை எச்சரிக்கும் வகையில் பேனர் வைத்துள்ளனர். அதில், காளிங்கராயன் வாய்க்கால் அருகில் மது அருந்தினால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாய சங்கத்தை சேர்ந்த செல்வகுமார் கூறுகையில்,`பொதுப்பணித்துறையின் அனுமதியோடு விவசாய சங்கத்தினர் நாங்களே இந்த எச்சரிக்கை பலகையை வைத்துள்ளோம். இதற்கு பிறகும் யாராவது இங்கு மது அருந்த வந்தால் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்து தண்டனை பெற்று தர தயாராக உள்ளோம்’ என்றார்.

Related Stories: