கனிமார்க்கெட் ஜவுளி சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஈரோடு, நவ.8: ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தையில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட  கடைகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர். ஈரோடு மாநகர பகுதிகளில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடை மேற்கூரை, விளம்பர போர்டு, கடைகள் வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகர பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு புதிதாக கட்டப்படுகிறது. இதற்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கனிமார்க்கெட் ஜவுளிசந்தையில் மணிக்கூண்டு செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் மீது 50க்கும் மேற்பட்ட பிளாட்பார ஜவுளி கடைகளை இருந்தன. இந்த கடைகளுக்கு பொதுமக்கள் வரும்போது பஸ் நிறுத்த வழியின்றி நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த ஜவுளி மார்க்கெட் பகுதியில் நின்று செல்லும். ஆனால், பிளாட்பார கடைகளினால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள். இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிளாட்பார கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, நேற்று நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் குழந்தைவேலு தலைமையில் ஜவுளி மார்க்கெட்டின் முன்புறம் இருந்த பிளாட்பார கடைகள் அகற்றப்பட்டது.மேலும், இங்குள்ள ஒரு லாட்ஜ் முன்பு பேக் விற்பனை கடை சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த கடையும் அகற்றப்பட்டது. பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில் வரை 150க்கும் மேற்பட்ட கடைகளில் சாலையோரம் வைத்திருந்த மேற்கூரை, விளம்பர போர்டுகளை அகற்றினர்.

கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தை முன்பு போடப்பட்டிருந்த பிளாட்பார கடைகள் அகற்றும் பணியையொட்டி 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தற்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ள நிலையில் சாலைகள் அகலமாக காணப்படுகிறது. தற்போது கனிமார்க்கெட் ஜவுளிசந்தையில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்படவுள்ள நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மீண்டும் பிளாட்பார கடைகள் அமைத்தால் அதை அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: