×

அர்த்தனாரிபாளையத்தில் வீட்டை உடைத்து மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம்

பொள்ளாச்சி, நவ.8: பொள்ளாச்சியை அடுத்த பருத்தியூர், ஆண்டியூர், அர்த்தனாரிபாளையம் பகுதியில் உள்ள தோட்டங்களில், கடந்த சில வாரமாக அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்த வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு அதனை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.  இதனால், அந்த யானை பகல் நேரத்தில் வனத்திற்குள்ளும், இரவு நேரத்தில் வன எல்லையில் உள்ள தோட்டத்திற்குள்ளும் புகுவது தொடர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அர்த்தனாரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புகுந்த யானை, ரத்தினசாமி என்ற விவசாயியை தாக்கியது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தை முற்றுகையிட்டு, யானையை நிரந்தரமாக விரட்ட அதிகரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில்  வனக்குழுவினர், அர்த்தனாரிபாளையம் பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவில், அர்த்தனாரிபாளைத்தில் உள்ள கனகராஜ் என்பவர் தோட்டத்தில் அந்த ஒற்றை காட்டுயானை புகுந்து 5க்கும் மேற்பட்ட தென்னைகளை சாய்த்ததுடன், தோட்டத்து குடிசை வீட்டை இடித்து சேதப்படுத்தியது. வீட்டில் யாரும் இல்லாததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. நேற்றும் அந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், பல மணி நேரமாக போராடியும் யானையை விரட்ட  முடியாமல் வனக்குழுவினர் தவிக்கும் நிலை ஏற்பட்டது.  அர்த்தனாரிபாளையம் மற்றும் பருத்தியூரில் உள்ள தோட்டங்களில் புகுவதை தடுக்க, தொடர்ந்து பகல் இரவு என கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாகவும், மேலிட உத்தரவு வந்தால் மட்டுமே அந்த ஒற்றை யானையை மயக்க ஊசிபோட்டு பிடிப்பது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால்...