×

ஒரு வாரத்திற்கு மேலாக 118 அடியை தாண்டிய ஆழியார் அணை நீர்மட்டம்

பொள்ளாச்சி,  நவ.8: ஆழியார் அணையின் நீர்மட்டம், ஒரு வாரமாக 118 அடியையும் தாண்டி  தொடர்ந்து உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.     பொள்ளாச்சியை அடுத்த மொத்தம் 120அடி ெகாள்ளளவு கொண்ட ஆழியார் அணையிலிருந்து  ஆயக்கட்டு பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.  இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை போதிய மழையில்லாததால், ஜூலை மாதம் வரை,  அணையின் நீர்மட்டம் 65 அடியே இருந்தது. அதன்பின், ஆகஸ்ட் மாதம்  துவக்கத்திலிருந்து பல வாரமாக,  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து  பெய்த தென்மேற்கு பருவமழையால், ஆழியார் அணைக்கு நீர் வரத்து  அதிகரித்துள்ளது.

அதுபோல் கடந்த அக்டோபர் மாதத்தில் பல நாட்கள்  வடகிழக்கு பருவமழை கனமழையாக பெய்ததால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து  தொடர்ந்து அதிகரித்தது.  இதனால், கடந்த 1ம் தேதியன்று அணையின் நீர்மட்டம்  118 அடியை எட்டியது. மேலும், அந்நேரத்தில் காடாம்பாறை நீர்மின்  நிலையத்திலிருந்து தண்ணீர் திறப்பால், அணையின் பாதுகாப்பை கருதி, சுமார் 8  மணி நேரத்திற்கு மேல், மெயின் மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர்  திறக்கப்பட்டது. ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும்  விவசாய தேவைக்கு என வினாடிக்கு 230 கன அடி தண்ணீர் திறப்பு  தொடர்ந்துள்ளது. தற்போது ஆழியார் அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது.  ஆழியார் அணையின் நீர்மட்டம் ஒரு வாரமாக 118 அடிக்கு மேல் இருப்பதால்,  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Aliyar Dam ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து 2504...