×

கோவை மாநகராட்சியை கண்டித்து 20ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

கோவை,  நவ. 8: கோவை மாநகராட்சியை கண்டித்து வரும் 20ம் தேதி திமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.
கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சி நிர்வாகம் 100 சதவீத சொத்து வரி  உயர்வை அமுல்படுத்தியுள்ளது. மேலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வினியோக  உரிமையை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.  இதன்மூலம், ேகாவை மாநகர மக்கள் மீது அளவுக்கு அதிகமான வரிச்சுமையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றியுள்ளது. அத்துடன், மாநகரில் குப்பை அகற்றுதல், தெருவிளக்கு பராமரிப்பு, மழைநீர் வடிகால்-சாக்கடை கால்வாய் தூர்வாருதல் என பராமரிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுகிறது.

இதை கண்டித்து, திமுக சார்பிலும், திமுக கூட்டணி கட்சிகள் சார்பிலும் பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்க மறுக்கிறது. தொடர்ந்து அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வரி உயர்வை வாபஸ் பெறக்கோரியும், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தால், தடையை மீறி இப்போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.

முன்னதாக நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர்  பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து,  மெட்டல் மணி, குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி, தலைமை  செயற்குழு உறுப்பினர் மெட்டல் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், மகுடபதி, தீபா, ராஜ ராஜேஸ்வரி பாபு,  தீர்மானக்குழு உறுப்பினர் செல்வராஜ், பகுதி கழக செயலாளர்கள் கோவை லோகு,  எஸ்.எம்.சாமி, வடவள்ளி சண்முகசுந்தரம், சேதுராமன், கோவிந்தராஜ், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,protests ,
× RELATED அரசுக்கு எதிரான போராட்டங்களில்...