×

கோவையில் ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்த பா.ஜ வலியுறுத்தல்

கோவை, நவ. 8: கோவையில் ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோவை கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அனுப்பியுள்ள மனு:
தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு, தொழில் நகரமான கோவையில் இருந்து ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், கோவை மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் இப்பகுதியில் ரயில்வே கட்டமைப்பு வலுப்படுத்தப்படவில்லை. எனவே, கீழ்க்கண்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டால், ரயில் பயனிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்துடன், ரயில்வே துறைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். அதன் விவரம்:

கோவை-பழனி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும். இது, நீலகிரி மாவட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பயணிகள் ரயில் இயக்கவேண்டும். இதன்மூலம், கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் பயனடைவார்கள். சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  கோவை-திருப்பூர் இடையே பயணிகள் ரயில் தினமும் குறைந்தபட்சம் 5 முறை இயக்கப்பட வேண்டும். இது, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும் மலைரயில் மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளை இந்த ரயிலை இயக்கவேண்டும். பழனி-திருப்பூர்-தாராபுரம் இடையே புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும். ஈரோடு-சாம்ராஜ்நகர் இடைேய ரயில் இயக்கப்படும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை, அமல்படுத்த வேண்டும். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரவேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு புதிதாக ரயில் இயக்கவேண்டும். கோவையில் இருந்து இயக்கப்படும் ராமேஸ்வரம், நாகர்கோவில் விரைவு ரயிலை பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags : BJP ,
× RELATED அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ