பாலவேடு ஊராட்சியில் சோகம் மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

ஆவடி, நவ. 8: ஆவடி அருகே பாலவேடு ஊராட்சியில், மர்மக்காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவி பலியானார். ஆவடி பாலவேடு ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் பிரியா (15).  திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் பெற்றோர் அவரை மீட்டு திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். இருந்தபோதிலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை, செனாய் நகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா நேற்று முன்தினம் பரிதாபமாக  இறந்தார். இதை அறிந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே சிறுமி மரணத்துக்கு அப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பாலவேடு ஊராட்சியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. மேலும், குப்பைகள், டயர்கள் தேங்காய் ஓடுகள், மட்டைகள் உள்ளிட்டவைகள் சரிவர அகற்றப்படவில்லை.  இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடிக்கின்றன. இதனால், அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.மேலும், பாலவேடு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு டெங்கு, சிக்கன்குனியா, மர்ம காய்ச்சல் குறித்து ஊராட்சி நிர்வாகமோ அல்லது சுகாதார துறையோ எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அச்சமாக உள்ளது’’ என்றனர்.

Tags :
× RELATED மர்ம காய்ச்சலுக்கு பள்ளி சிறுமி பரிதாப பலி: பெரம்பூரில் பரபரப்பு