×

ஆவடி, பருத்திப்பட்டு சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

ஆவடி, நவ. 8: ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.      ஆவடி மாநகராட்சி 16வது வார்டு பருத்திப்பட்டு பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லக்கூடிய சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. மேலும், சாலையை ஒட்டிய காலி நிலத்திலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.  இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பருத்திப்பட்டில் உள்ள பூங்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் காலை, மாலை வேளைகளில் வந்து செல்கின்றனர்.     இதே பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகன பதிவு, லைசென்ஸ் உள்ளிட்டவைகளை பெற வருகின்றனர். மேலும், மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கழிவுநீர்  தேங்கி நிற்கிறது.

இதனால் சாலை சேதமாகி பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதன் வழியாக குடியிருப்பு, பூங்கா, வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களுக்கு தினமும் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயம்  அடைகின்றனர். மேலும் அவர்களது உடைகளிலும் கழிவுநீர் தெளித்து சேதமாகிறது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்வோர் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.      மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் படையெடுப்பதால் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கழிவுநீர் குளம்போல் தேங்கி  நிற்கும் பகுதியை ஒட்டி பூங்கா உள்ளதால் பெரியவர் முதல் சிறுவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
இதோடு மட்டுமல்லாமல் ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சுகாதார சீர்கேட்டால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் அப்பகுதி  மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி நோய் பாதிப்புக்கு ஆளாகி  வருகின்றனர். எனவே இனியாவது பருத்திப்பட்டு பூங்காவை ஒட்டியுள்ள சாலையில்  தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும், கால்வாய் அடைப்புகளை நீக்கி கழிவுநீர் செல்ல வழிவகை செய்யவும் வேண்டும்’’ என்றனர்.

Tags : cotton road ,
× RELATED கழிவுநீரை பொது இடத்தில் விட்டதை கேட்ட நகராட்சி கமிஷனரை தாக்க முயற்சி