×

மனைவிக்கு சரமாரி கத்தி குத்து

செய்யூர், நவ. 8: சூனாம்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (32). சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கந்தாடு கிராமத்தை சேர்ந்த தேவி (27)  என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.திருமணத்துக்கு முன்புதேவிக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும், அவர்களுக்குள் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த நடராஜன், தேவியை பலமுறை கண்டித்துள்ளார்.  இதனால், அவர்களுக்குள் தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.இதைதொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன், தேவி வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், நடராஜன், மனைவியை பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து நடராஜன், சூனாம்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார், கந்தாடு கிராமத்தில் இருந்த தேவியை நேற்று மாலை, காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு இருவரிடமும் சமரசம் பேசினர்.அப்போது தேவி, நடராஜனை பிரிந்து தனது சொந்த ஊருக்கே போவதாக போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் அவரை பலமணி நேரம் சமரசம் செய்தும்,  எழுத்துப்பூர்வமாக தனது கணவனை பிரிந்து செல்வதாக தேவி எழுதி கொடுத்துவிட்டு,  சொந்த ஊருக்கு புறப்பட்டார். போலீசார் நடராஜனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.காவல் நிலயைத்தில் இருந்து அருகே உள்ள பஸ் நிலையம் சென்ற தேவி, அங்கு பஸ்சுக்காக காத்திருந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற நடராஜன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில்  அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள், பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த தேவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடராஜனை கைது செய்தனர்.  பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED மனைவி மாயமானதால் விரக்தி குடிநீர்...