×

சர்வதேச சந்தையில் வரத்து குறைவு எதிரொலி ரப்பர் விலை மீண்டும் உயருகிறது

நாகர்கோவில், நவ.7: சர்வதேச சந்தையில் வரத்து குறைந்த நிலையில் ரப்பர் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் ரப்பர் விலை கடந்த அக்டோபர் மாதம் கிலோ ₹119 ஆக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது ₹125 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ரப்பர் வரத்து குறைந்துள்ளதின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயர்ந்துகொண்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரப்பர் வாரியம் கருதுகிறது. ரப்பர் மார்க்கெட்டில் விலையேற்றத்திற்கு மேலும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தற்போது ரப்பர் மரங்களில் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் ரப்பர் மரங்களில் பால்வெட்டு பாதிக்கப்பட்டு ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. மழை காரணமாக இந்தியாவிலும் ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக ரப்பர் இறக்குமதியை குறைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 73 ஆயிரத்து 700 டன் ரப்பர் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இறக்குமதி என்பது 40 ஆயிரத்து 500 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. வாகன உற்பத்தியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக டயர் உற்பத்திக்கான தேவைகள் குறைந்தது. இதனால் ரப்பர் இறக்குமதியை நிறுவனங்கள் குறைத்தன. மழை காரணமாக மொத்தம் 11.2 சதவீதம் ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வரும் மூன்று மாத காலம் ரப்பர் பால்வெட்டு அதிகரிக்கும் கால கட்டம் ஆகும். மேலும் இந்தியாவில் இந்த ஆண்டு ரப்பர் உற்பத்தி அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதால் ரப்பர் விவசாயம் செய்யும் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.

Tags :
× RELATED பங்குச்சந்தை சரிவு; 3.65 லட்சம் கோடி இழப்பு