×

தொடர் மழையால் நீரூற்று அதிகரிப்பு பாலமோர் சாலையில் புதை மணலில் சிக்கும் அரசு பஸ்கள்

நாகர்கோவில், நவ.7: பாலமோர் சாலையில் நிலத்தடி நீரூற்று அதிகரிப்பால், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே தோண்டப்பட்ட சாலை புதை மணலாக மாறி, அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சிக்கி வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்ய புத்தன் அணை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுமார் ரூ.250 கோடியில் இந்த திட்டத்துக்கான பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடந்து வருகிறது. திட்ட மதிப்பில் 50 சதவீதம் மத்திய அரசு நிதியும், 30 சதவீதம் மாநகராட்சியும், 20 சதவீதம் தமிழக அரசும் ஒதுக்குகிறது. இந்த கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்திய பிறகு மாநகராட்சி பகுதியில் ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். இதற்காக தினமும் 360 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்படும். புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையம் வரை உள்ள 32 கிலோ மீட்டர் தூரம் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.

 வீரப்புலி, தடிக்காரன்கோணம், அழகியபாண்டிபுரம், துவரங்காடு, இறச்சக்குளம், புத்தேரி வரையிலான பாலமோர் ரோட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இன்னும் சில இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கப்பட வேண்டும். குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதியில் சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. இதனால் பாலமோர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. ஏற்கனவே தொடர்ந்து விபத்துக்களும், உயிர் பலிகளும் நடந்துள்ளன.நாகர்கோவிலில் இருந்து பூதப்பாண்டி, அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர் என 4 ரூட் பஸ்கள் அனைத்தும் பாலமோர் சாலை வழியாக தான் செல்கின்றன. மிக முக்கியமான சாலை மோசமாக கிடப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
 இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்கள் சேறும், சகதியுமாக மாறி, புதை மணலாகி உள்ளன. கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இந்த புதை மணலில் அரசு பஸ்கள் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், புத்தேரி பஸ் நிறுத்தம் பகுதியில் இரு அரசு பஸ்கள் அடுத்தடுத்து சிக்கின.

இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து பூதப்பாண்டி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று, நேற்று பகல் 12 மணியளவில் புத்தேரி பாலத்தை கடந்து சென்று கொண்டு இருந்தது. அந்த பகுதியில் ஏற்கனவே குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டு மண் நிரப்பி மூடி உள்ளனர். மழை காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. எதிரே வந்த பஸ்சுக்கு வழி விடுவதற்காக டிரைவர் பஸ்சை இடதுபுறம் திருப்பிய போது புதை மணலில், பஸ் சிக்கியது. இதனால் தொடர்ந்து பஸ்சை இயக்க முடிய வில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு, மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பஸ்சை புதை மணலில் இருந்து மீட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், மக்கள் கொதிப்படைந்துள்ளனர். திட்ட பணிகளை வேகமாக முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களிடம் கேட்ட போது, பாலமோர் ரோட்டில் சுமார் 26 கி.மீ. தூரம் பணிகள் முடிவடைந்து, 16 கி.மீ. தூர சாலை, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. புத்தேரி சுதா சுந்தர் மருத்துவமனையில் இருந்து, நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறும் வரையிலான இடைப்பட்ட பகுதியில் குழாய் பதிக்கப்பட வேண்டும். மழை தொடர்ந்து பெய்து வந்ததால் பணிகள் நடைபெற வில்லை. மேலும் மழை காரணமாக சாலையில் நீருற்று அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் குளம் உள்ளது. குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், சாலையில் ஒன்றரை அடி தோண்டினாலே நீரூற்று வந்து விடுகிறது. இந்த திட்டத்துக்கு 3 அடி ஆழம் வரை தோண்டி குழாய் பதிக்கப்பட வேண்டும். மேலும் குழாய் இணைப்பு பகுதியில் வெல்டிங் வைக்கப்படுகிறது. தண்ணீர் அதிகமாக உள்ள சமயத்தில் வெல்டிங் பயன்படுத்த முடியாது. எனவே தான் பணியை தற்போது நிறுத்தி வைத்து உள்ளோம். இன்னும் 1 மாத காலத்துக்குள் இந்த பகுதியில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையிடம் சாலை ஒப்படைக்கப்படும் என்றனர்.

புத்தன் அணை திட்டம் முடியுமா?
புத்தன் அணை திட்டத்துக்காக  கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாநகரின் முக்கிய இடங்கள் என 11 இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட வேண்டும். இந்த பணிகளும் மழையால் நிறுத்தப்பட்டுள்ளன. 2020 ஜூன் மாதத்துக்குள் இந்த பணிகளை முடித்து திட்டத்தை செயல்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால் இப்போது பணிகள் நடைபெறும் நிலையில் 2020க்குள் பணிகள் முடிவுடையுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : Balmoor Road ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல்...