×

குமரி மாவட்டம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்

நாகர்கோவில், நவ.7:    குமரி மாவட்டம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள், முன்னேற்றம் குறித்த மாவட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் பல்வேறு துறைகள் வாயிலாக நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். முந்தைய ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து தனித்தனியே கேட்டறிந்து, அதை செயல்படுத்துவதில் இடையூறுகள் இருப்பின் அதற்கான மாற்று ஆலோசனைகளை வழங்கி, வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகள் தரமானதாகவும் இருக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.

 மேலும் பழுதடைந்த சாலைகளை துரிதமாக செப்பனிடவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளையும், பழுதடைந்த மின்சார கம்பி மற்றும் குடிநீர் குழாய்களையும் சீர் செய்து, பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்திட வழிவகை செய்ய ஆலோசனை வழங்கினார். வளர்ச்சித்திட்ட பணிகளை செயல்படுத்துவதில் இடையூறு ஏதும் இருந்தால் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு எடுத்து சென்று திட்டமிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் திட்ட பணிகள், பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் கட்டிட பராமரிப்புப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மழைக்காலத்தை முன்னிட்டு விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர் நிலுவையிலுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, மாவட்ட வன அலுவலர் ஆனந்த், சப் கலெக்டர் (பத்மநாபபுரம்) ஷரண்யா அறி, ஐஆர்எஸ் அதிகாரி எழிலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை (நீர் வளம், கட்டிடம், மின்சாரம்), குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : roads ,district ,Kumari ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மழை பெய்தால் குளமாகும் சாலை வாகன ஓட்டிகள் அவதி