×

குமரி முழுவதும் கைவரிசை காட்டிய டாஸ்மாக் கொள்ளையர்களுக்கு துப்பாக்கி சப்ளை

நாகர்கோவில், நவ.7 : குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை சூப்பர் வைசர்களிடம் கொள்ளையடித்த கும்பலுக்கு துப்பாக்கி சப்ளை செய்த நபரை, போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, சுசீந்திரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளிலும், டாஸ்மாக் சூப்பர் வைசர்களை தாக்கியும் தொடர்ச்சியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி, நாங்குநேரியிலும் டாஸ்மாக் ஊழியர்களிடம் கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை சம்பவங்களில் ஒரே கும்பல் தான் ஈடுபட்டு வருவதும், இந்த கும்பலில் உள்ளவர்கள் துப்பாக்கி வைத்து மிரட்டுவதும் தெரிய வந்தது. இதையடுத்து நெல்லை, குமரி தனிப்படைகள் தீவிர விசாரணையில் இறங்கினர். இதன் அடிப்படையில் குமரி மாவட்ட தனிப்படை போலீசார், நடத்திய அதிரடி சோதனையில், நாகர்கோவில் கலுங்கடி பகுதியை சேர்ந்த அருண் சஜுவ், வடசேரி பள்ளிவிளையை சேர்ந்த பிரபாகரன், மார்த்தாண்டத்தை சேர்ந்த நீலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், நாங்குநேரியை சேர்ந்த டைசன் என்பவரிடம் துப்பாக்கி வாங்கியதாகவும், பணகுடி பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு பார்த்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து டைசனை போலீசார் தேடி வந்தனர்.  கடந்த சில வாரங்களுக்கு முன், டைசனை நாங்குநேரி போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்து இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் டைசனிடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி, நீதிமன்றத்தில் வடசேரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நாகர்கோவில் நீதிமன்றம் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. அதன்படி டைசனை நேற்று முன் தினம் குமரி மாவட்ட தனிப்படை போலீசார் காவலில் எடுத்தனர். அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? வேறு யாருக்காவது துப்பாக்கி சப்ளை செய்துள்ளாரா? என்பது பற்றி விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் துப்பாக்கி சப்ளை விவகாரத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : robbers ,Gun Supply for Task Force ,Kumari ,
× RELATED கலிதீர்த்தாள்குப்பத்தில் போலீசுக்கு சவால் விடும் மணல் கொள்ளையர்கள்