×

திருவட்டார் அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் சிக்கினர்

குலசேகரம், நவ.7:  திருவட்டார் அருகே வாலிபர் கொலையில் 2 பேர் சிக்கினர். திருட்டு மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த மேக்காமண்டபம் அம்போட்டுதலவிளை பகுதியை சேர்ந்தவர் பொன் ஜெபசிங் (40). இவரது மனைவி அனிதாகுமரி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பொன் ஜெபசிங், திருட்டு மது விற்பனை செய்துள்ளார். அவர் மீது திருவட்டார் மற்றும் குழித்துறை மதுவிலக்கு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன் மாலை அவரது மனைவி அனிதாகுமாரி குளிக்க சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது, பொன் ஜெபசிங் தலையில் படுகாயத்துடன் வீட்டு முன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பொன் ஜெபசிங், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று பொன் ஜெபசிங்கிடம் மது வாங்க வந்த 2 பேர் அவரிடம் தகராறு செய்து, அவரை கீழே தள்ளிய தகவல் போலீசாருக்கு கிடைத்திருந்தது. இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவத்தன்று பொன் ஜெபசிங்கிடம் மது வாங்க வந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தான், சம்பவத்தன்று பொன் ஜெபசிங்கிடம் தகராறு செய்து அவரை கீழே தள்ளியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மது வாங்கிய போது, அதிக  பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Thiruvattar ,youth murder ,
× RELATED மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது