×

மூணாறில் சாலைப்பணிக்காக கொட்டப்பட்டுள்ள மணல், பாறைத்துகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

மூணாறு, நவ. 7: மூணாறில் சேதமடைந்த முக்கிய சாலைகளை சீரமைக்க கொட்டி வைக்கப்பட்டிருக்கும் பாறை துகள் மற்றும் மணல் ஆகியவை மூலம் மூணாறில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மூணாறில் கடந்த வருடம் பெய்த கனமழை மூலம் மூணாறு ஹெட் ஒர்க்ஸ் அணை முதல் பெரியவாரை பகுதி வரை உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாபயணிகள் பெரிதும் பதிப்படைந்தனர்.இந்நிலையில் சாலைகளை சீரமைக்க அரசு சார்பாக நிதி ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் சாலைகளை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்படவே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.சாலை மறியல், சாலைகளில் பாய்விரித்து மறியல் என பல போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் பலனாக முக்கிய சாலைகளை சீரமைக்க தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமையில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாலைகளை சீரமைப்பதற்காக பாறைதுகள், மணல் மற்றும் கற்கள் ஆகியவை முக்கிய சாலைகளில் கொட்டப்பட்டு வருவதால் மூணாறில் காற்று மாசு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் காற்று மாசு மூலம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். காற்றின் மூலம் பாறை பொடிகள் உணவு விடுதிகளுக்குள் நுழைவதால் மூணாறில் சில உணவு விடுதிகள் அடைக்கப்பட்டது. மேலும் சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மூக கவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சுற்றுலா பயணிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், சாலைகளில் நடக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சாலைகளை சீரமைப்பது வரவேற்கத்தக்க விஷயம் ஆகும். ஆனால் சாலை பணிகளுக்காக கொண்டு வரும் மணல் மற்றும் பாறை துகளை பாதுகாப்பான இடத்தில் கொட்டாமல் முக்கிய சாலைகளில் கொட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வாகன ஓட்டுனர்கள் அதிகம் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பணிகளுக்கான மணல் பாறைபொடிகளை கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்’ என்றனர்.

Tags : Munnar ,
× RELATED மணல் கடத்திய