×

ஆண்டிபட்டியில் 9 பவுன் நகை திருடிய 2 பேர் கைது

தேனி, நவ. 7: ஆண்டிபட்டி-ஜக்கம்பட்டியில் பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ஒன்பதேகால் பவுன் நகை திருடுபோனது சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டனர்.ஆண்டிபட்டி-ஜக்கம்பட்டியில் அரிஜன காலனியில் குடியிருப்பவர் சதீஸ்குமார் மனைவி அன்னபூரணி என்ற ராணி (32). சதீஸ்குமார் கேரளாவில் பிளாஸ்டிக் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அன்னபூரணி அவரது அக்காள் கணேஸ்வரி வீட்டில் தங்கியிருந்தார். அன்னபூரணியின் அக்காள் மகள் நாகலட்சுமி தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவரை பார்க்க நேற்று முன்தினம் காலை அன்னபூரணி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருடைய ஒன்பதே கால் பவுன் நகைகளை அக்காள் கணேஸ்வரியின் பீரோவில் வைத்து விட்டு சென்றனராம். திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. பீரோவிற்குள் பார்த்தபோது அங்கே வைத்திருந்த ஒன்பதேகால் பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.இதுகுறித்து அன்னபூரணி ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அன்னபூரணியின் அக்காள் மகன் பழனிவேல் (25), உறவினர் மணி (45) ஆகியோர் திருடியது தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags : persons ,9pence jewelery ,
× RELATED காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்